"அதிமுக ஆட்சி அமைந்தால் தான் மோடியின் திட்டம் நமக்கு கிடைக்கும்”- நயினார் நாகேந்திரன்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மக்களோடு ஒருவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் உள்ளனர்.
சுற்றுப்பயணத்தின்போது பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “1972ல் புரட்சித் தலைவரால் உருவான புரட்சி, இப்போதும் ஏற்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி பரப்புகிறார். அதிமுக ஆட்சி அமைந்தால் தான் மோடியின் திட்டம் நமக்கு கிடைக்கும். அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி. அமித்ஷா அவர்கள் இந்த கூட்டணியை ஈ.பி.எஸ் அவர் தலைமையில் அமைத்துள்ளார். எடப்பாடியாரின் சுற்றுப்பயணத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள். நாளேடுகளை படிக்கவே முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்கின்றன. அதிமுக - பாஜக கூட்டணி இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும்” என்றார்.