×

“காற்றில் பறந்த வாக்குறுதி... சொன்னீங்களே, செஞ்சீங்களா?”- நயினார் நாகேந்திரன் கேள்வி

 

நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத் தானே நிறைவேற்றக் கேட்கிறோம் என்ற கேள்விக்கு, அமைச்சர் திரு.  சேகர்பாபு அவர்களோ அப்படி ஒரு வாக்குறுதியைத் திமுக கொடுக்கவேயில்லை என நாகூசாமல் பதிலளித்திருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர்!நிறைவேற்றப்படாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை எனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கவிருக்கிறேன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என மார்தட்டும் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மறந்து போன முக்கியமான 100 தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. கடந்த 12 நாட்களாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களின் மீது இரவோடு இரவாக அடக்குமுறையை ஏவியுள்ள திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத் தானே நிறைவேற்றக் கேட்கிறோம் என்ற கேள்விக்கு, அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களோ அப்படி ஒரு வாக்குறுதியைத் திமுக கொடுக்கவேயில்லை என நாகூசாமல் பதிலளித்திருக்கிறார். ஆகவே, இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, நம் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்த அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிட அளிக்கப்பட்ட, இன்று வரை நிரைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து தொடங்குவோம்! இதோ திமுக-வின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதி எண். 285! இதை அதிக அளவில் மக்களிடையே எடுத்துரைக்க தமிழக பாஜக தொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதியோடு உங்களை சந்திக்கிறேன்!
#சொன்னீங்களே_செஞ்சீங்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.