“விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத் தனமானது” - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டில் எமர்ஜென்சி ஆட்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 23ஆம் தேதியோடு அது அகற்றப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்று மாலை மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் இன்று மாலை சென்னை வருகிறார். மாலை 6:00 மணியளவில் கமலாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். பாஜகவை பொறுத்தவரை வேட்பாளர்கள் தேர்வு குறித்து கமிட்டி என்ன முடிவு செய்கிறதோ அதுதான் இறுதி முடிவாக இருக்கும்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு சரியான பாதுகாப்பு வழங்காதது காவல்துறை பிரச்சனை, ஸ்டாலினுடைய திமுகவின் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு ஒரு நிலைமையும் எதிர்க்கட்சிக்கு ஒரு நிலைமையும் ஏற்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டமோ பிரச்சாரமும் செய்ய வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் மூலம் அணுகி அதன் மூலம் ஆணை வாங்கி தான் கூட்டத்தை நடத்தக்கூடிய சூழல் உள்ளது. அதேபோல் திமுகவின் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டு வழக்கு போட்டுள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை தவறாக பேசியவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் திமுகவினர் மீது ஏதாவது சொல்லிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து விடுகிறார்கள். பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் இன்று தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை, தமிழ்நாட்டில் எமர்ஜென்சி சட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதியோடு அது மாற்றப்படும். அதிமுக ஏற்கனவே ஆட்சி செய்த கட்சி. மீண்டும் ஆட்சி செய்ய போகிற கட்சி எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தமிழக வெற்றி கழகத்தினர் சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.