"காவல் நிலையத்திற்கு சென்று ஒரு அமைச்சர் FIR எடுத்து ஆய்வு செய்கிறார்"- நயினார் நாகேந்திரன்
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் கர்நாடக முதலமைச்சருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசாதது மிகப்பெரிய வருத்தம் அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "காவல் நிலையத்திற்கு சென்று ஒரு அமைச்சர் FIR எடுத்து ஆய்வு செய்கிறார். நாங்கெல்லாம் கூட அமைச்சராக இருந்திருக்கிறோம்.. இதுவரையில் இது போல் நடந்ததே இல்லை. பெண் காவலரின் சுயமரியாதையையும் சினிமாப் பாடல் பின்னணியில் கேலிக்கூத்தாக்குவதுதான் தவெக அரசு கூறும் நிர்வாகத் திறமையா?
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் கர்நாடக முதலமைச்சருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசாதது மிகப்பெரிய வருத்தம். காவிரியில் தண்ணீர் விட காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு மறுப்பதோடு மேகேதாட்டு அணை கட்டவும் முயற்சிக்கிறது. காங்கிரசைக் கண்டிக்காமல் டெல்லியில் சோனியாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் துரோகம் செய்துள்ளார். இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய, தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் எனக் கூறியுள்ள அமைச்சர் ஷாஜகானின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. சமூக நீதி என்ற * பெயரில் தவெக அரசு மத அரசியல் செய்கிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.