நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்! என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் விஜய்? - நயினார் நாகேந்திரன்
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ராகுல் காந்திதான் கொண்டு வந்தார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். ராகுல் காந்திதான் கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு முன் ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை இருந்தது. டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் மாணவர்கள் இல்லை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். முக்கிய மசோதாக்கள் கொண்டுவரும்போது இதுபோல் குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு தேசத்துரோகம். போராட்டத்தை தூண்டிவிட்டவர் ராகுல், காங்கிரஸ் இவ்வளவு கோழைத்தனமாக இருக்கும் என்று தெரியாது. 10 ஆண்டுகளுக்கு மேல் நீட் தேர்வு எழுதுகிறார்கள், இன்னும் வேண்டாம் வேண்டாம் என்றால் என்ன செய்வது? நீட் தேர்வு எதிர்ப்புக்கும் பாலஸ்தீன நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார்.
பிரதமர் மோடியை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை கோரிக் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. முதல்வரை பேசியதற்காக விளாத்திக்குளம் எம்.எல்.ஏவை அதிகாலையிலேயே சென்று கைது செய்தீர்களே... பிரதமர் மோடியை தவறாக சித்தரித்தவர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.