தனித்து போட்டியிடும் தைரியம் முதல்வருக்கு இருக்கிறதா?- நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான நயினார்நாகேந்திரன் சாத்தூரில் இன்று பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார். அப்போது பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க தான் முழுமையாக பாடுபடுவேன் என அவர்களுக்கு உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “முதல்வர் பயத்தில் நடுநடுங்கிப் போய் உள்ளார், பயம் என்றால் முதல்வருக்கு அப்படி பயம். 1999ம் ஆண்டு திமுக யாரோடு கூட்டணியில் இருந்தது, அன்றைக்கு மட்டும் பாரதிய ஜனதா கட்சி இனித்திருந்தது இன்றைக்கு கசைக்கிறதா? இன்றைக்கு திமுக ஒரு தேசியக் கட்சியோடுதானே சேர்ந்துதானே பயந்து கொண்டிருக்கிறது. ஏன் திமுகவால் தனித்து போட்டியிட முடியவில்லை? திமுக தனித்துப்போட்டியிட்டால் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும். அந்த தைரியம் முதல்வருக்கு இருக்கிறதா?
திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தொழிலாளர்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியாததால் நாடு சீரழிவான சூழலைக்கு சென்றுள்ளது என்பதை முதல்வர் உணர வேண்டும். சட்டம், ஒழுங்கு சரியில்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர வேண்டும். இன்றைக்கு கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தகவல் வெளியாகி வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி குறித்து முதல்வர் விமர்சனம் செய்கிறார் என்றால் பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் எவ்வளவு அக்கரை வைத்துள்ளார்கள். எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை முதலமைச்சர் வாயிலாக நாம் தெரிந்து கொள்கிறோம். தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லைட்டரை தடை செய்துள்ளோம், தீப்பெட்டிக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் அதனையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்” என்றார்.