“ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்”- நயினார் நாகேந்திரன்
நடிகர் விஜய் கரூரில் விபத்து நடந்ததால் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று கூறினார். ஆனால் மற்ற மத விழாக்களை கொண்டாடுகிறார். இது திமுகவின் சாயலை காட்டுகிறது. 41 உயிர்கள் பலியானதை அவர் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட நவீன போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. திருவண்ணாமலையில் ஒரே வாரத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 18 வயது இளைஞர்கள் கையில் புத்தகத்திற்கு பதிலாக போதை மயக்கத்தில் அரிவாளை ஏந்தும் நிலை உருவாகியுள்ளது. பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவே கடிதம் எழுதியுள்ளேன்.
2026 ஏப்ரலில் தேர்தல் வரும் போது தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவார்கள். 026 ஆம் ஆண்டு என்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும். காங்கிரஸ் கட்சியினுடைய ஒரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைய விரும்புவதாக தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தமிழகத்தின் கடன் அளவை உத்திரப் பிரதேசத்தோடு ஒப்பிட்டு பேசுவது அவர்களுக்குள் மோதலை உருவாகி காட்டுகிறது. 1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது போன்ற சூழல் இப்போது உருவாக வாய்ப்பு உள்ளது. வெற்றி பெறும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கருதி பல கட்சிகள் பொங்கலுக்குப் பிறகு தங்கள் முடிவை அறிவிக்கலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்த அறிவிப்புகள் வழியாகும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 4ஆம் தேதி மாலை திருச்சி வருகிறார். அங்கிருந்து புதுக்கோட்டை சென்று தமிழகம் தலைமை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையில் பங்கேற்று பேச இருக்கிறார். இதில் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். ஜனவரி 5ஆம் தேதி காலை ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் பிரமாண்டமான தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். போலி மதச்சார்பின்மை பேசும் சிலர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் பிற மத விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதைப் போல் அல்லாமல் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த விழா அமையும்.
நடிகர் விஜய் கரூரில் விபத்து நடந்ததால் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று கூறினார். ஆனால் மற்ற மத விழாக்களை கொண்டாடுகிறார். இது திமுகவின் சாயலை காட்டுகிறது. 41 உயிர்கள் பலியானதை அவர் பெரிதாக மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்த தகவல்களை வரவேற்கிறேன், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதை எனது விருப்பம்” என்று கூறினார்.