×

“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்”- ஓபிஎஸ் சொன்ன அதே வார்த்தையை சொன்ன நயினார் நாகேந்திரன்

 

தேனி மாவட்டம் போடி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்  தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் எனும் நிகழ்ச்சியின் வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், கரட்டுப்பட்டி கிராம மக்களின் பிரதான தொழிலான மலை மாடுகள் மேச்சலுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பது குறித்து பேசிய போது இன்னும் இரண்டரை மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அப்போது உங்களது பிரச்சனைக்கு தீர்வு உடனடியாக கிடைக்க செய்வோம் என உறுதியளித்தார். வனத்துறையிரின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர்,மக்களுக்கு பயன்படாத சட்டம் தேவையில்லை என காமராஜர் தெரிவித்ததை அறிந்தவன் எனும் முறையில் வனத்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் உரையற்றினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சீமானின் மாடு மேய்க்கும் போராட்டத்தின் போது 58 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிவித்தபோது வழக்குகளை தமிழக அரசுதான் வாபஸ் பெற வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அது குறித்து அரசுக்கு வழியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த வாரம் ஒரே நாளில் மட்டும் நான்கு பாலியல் பலாத்காரம், எட்டு கொலைகள் நடைபெற்றுள்ளன. அந்த அளவிற்கு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று அனைத்து இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைக்கின்றன என்றார்.

பின்னர் NDA கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக கரட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பாக மாடுகளுடன் அவர்களது பாரம்பரிய தேவராட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியான அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்டிகே ஜக்கையன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.