தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மாற்றம்?- எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிடும் பாஜக
நெல்லையில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் இன்று பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பாஜக மூத்த தலைவர்கள் ஆன பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி கோட்டத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து நடத்தி உள்ளோம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லாத ஒரு சூழ்நிலை. கல்வியில் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி செல்வப் பெருந்தகையை பிச்சைக்காரரோடு ஒப்பிட்டு பேசியுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சியினர் யாராக இருந்தாலும் காமராஜர் ஆட்சியை தர முடியுமா என்று தெரியாது” என்றார்.
அண்ணாமலை டிடிவியை சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுங்கள் என்று கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்து மாற்ற வேண்டும் தொடர்ந்து கூறி வருகிறார். அவரை மாற்றுவதற்கு நீங்கள் தேசிய தலைமையில் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், டிசம்பர் மாதத்தில் பதில் தெரியும் என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாஜக கூட்டணியிலிருந்து மாறலாம் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவர் தற்போது தான் என்னிடம் அலைபேசியில் பேசினார். அதுபோன்ற அர்த்தத்தில் நான் எதுவும் கூறவில்லை. மீடியாக்கள் திரித்து பேசுகின்றன என தெரிவித்துள்ளார். நாங்கள் செய்யும் நல்ல விஷயங்களை மீடியாக்கள் வெளியில் எடுத்து கூறவே இல்லை.பாஜகவை மட்டும் அனைவரும் குறை கூறுகிறீர்கள் என்றார்.