நட்சத்திர ஓட்டல்களில் கொக்கைன் சப்ளை நடப்பதுதான் ஆன்மீக அரசியலா? *-- நயி/னார் நாகேந்திரன்/
நிச்சயம் இனி திமுக ஆட்சிக்கு வர முடியாது, தமிழகத்திற்கு திமுக வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாஜகவில் இணைய வருகை தந்த பொதுமக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “திமுக கூட்டணியிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. எங்கள் கூட்டணியை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்புவது ஏன்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை இடம் தருவார்கள் என முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் மாறுதல் வேண்டும். ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பை அரசியல் இல்லாமல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் கூட்டணியின் தத்துவமே திமுக இனி தமிழகத்தில் வேண்டாம் என்பது தான், நிச்சயமாக திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது.
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி என ஆதினங்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பதுதான் ஆன்மீக அரசியலா? நட்சத்திர ஓட்டல்களில் கொக்கைன் சப்ளை நடப்பதுதான் ஆன்மீக அரசியலா? பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதுதான் ஆன்மீக அரசியலா?” எனக் கேள்வி எழுப்பினார்.