அப்பாவிப் பெண்களை பெல்ட்டால் அடித்து அடிபணிய வைத்த கொடூரர்களின் கைகள் ஆயுள் வரை சிறைக் கம்பிகளை எண்ணி ஓய்ந்து போகட்டும்- வானதி சீனிவாசன்
அப்பாவிப் பெண்களைத் தவறாகப் படமெடுத்து அவர்களை பெல்ட்டால் அடித்து தங்கள் ஆசைக்கு அடிபணிய வைத்த அந்தக் கொடூரர்களின் கைகள், இனி ஆயுள் வரை சிறைக் கம்பிகளை எண்ணி ஓய்ந்து போகட்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை சேர்ந்த சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், பொள்ளாச்சி, ஜோதிநகர் சபரிராஜன் (28), மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு (30), சூளேஸ்வரன்பட்டி சதீஷ் (29), சூளேஸ்வரன்பட்டி வசந்தகுமார் (26), ஆச்சிபட்டி மணிவண்ணன் (28), மகாலிங்கபுரம் பாபு என்கிற பைக் பாபு (28), ஆச்சிபட்டி ஹெரோன் பால் (28), வடுகபாளையம் அருளானந்தம் (36), பொள்ளாச்சி பணிகம்பட்டி அருண்குமார் (29) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன். அந்தக் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்கும் சட்டம் செவி சாய்த்து நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதை நினைக்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது, மனம் நிம்மதியடைகிறது. பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக பாவித்து அவர்களை மிரட்டி தங்கள் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் எனத் திரியும் சிலரின் ஆணாதிக்க மனப்போக்கினை இதுபோன்ற தீர்ப்புகள் தூள் தூளாக உடைத்தெறியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்ற பாடலைப் பள்ளி முதலே படித்துணர்ந்து வரும் இந்நாட்டில், தங்கள் இச்சைக்காக பெண்களைப் பாலியல் வேட்டையாடும் மனித மிருகங்கள் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடியாது, அதை நீதி காத்த இந்நல்லுலகம் வேடிக்கை பார்க்காது! அப்பாவிப் பெண்களைத் தவறாகப் படமெடுத்து அவர்களை பெல்ட்டால் அடித்து தங்கள் ஆசைக்கு அடிபணிய வைத்த அந்தக் கொடூரர்களின் கைகள், இனி ஆயுள் வரை சிறைக் கம்பிகளை எண்ணி ஓய்ந்து போகட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.