×

முதல்வரின் மனது கல்லால் ஆனதா?- வானதி சீனிவாசன்

 

அறவழியில் போராடி வரும் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. கண்ணன் என்பவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த தேர்தலின் போது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்கிறோம் என திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து அறவழியில் போராடி வரும் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. கண்ணன் என்பவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவதென்றே தெரியவில்லை. 

உலகத்தமிழர்கள் எல்லாம் உழவர் திருநாளை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு கூட செல்லாமல் ஆசிரியர்களும் தூய்மைப்பணியாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுக அரசின் பாராமுகத்திற்கு ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் அநியாயமாக பலியாகியுள்ளார். பண்டிகை கோலம் பூசி ஜொலிக்க வேண்டிய தமிழகம் திமுகவின் கோரப்பிடியில் சிக்கி களையிழந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. திமுக அரசின் அலட்சியத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியருக்கு குறைந்தபட்சம் அஞ்சலி செலுத்தக் கூட மனமில்லாத முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது நிலைவித்துவான்களும் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்பார்கள்? மனசாட்சி இல்லாத திமுகவினருக்கு மக்கள் தங்கள் மனதில் எப்படி இடம் கொடுப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.