ஏழை மக்களின் உயிர்களை ஈவு இரக்கமின்றி காவு வாங்குவது தான் திமுகவின் கொள்கையா?- வானதி சீனிவாசன்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. ஆயிரம் அனுதாபங்கள் கூறினாலும் ஆளும் அரசின் அலட்சியத்தால் பறிபோன அப்பாவி உயிர்களின் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்களை வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கும் திமுக போன்ற தீய சக்திகள் அரியணையை ஆட்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இடத்திற்கு இடம் தகுந்தாற்போல, ஒவ்வொரு விளம்பர ஷூட்டிற்கும் ஏற்றாற்போல விதவிதமாக உடையணிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டும் திமுக தலைவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உயிர்காக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் மட்டும் இத்தனை அலட்சியம் காட்டுவது ஏன்? ஏழை மக்களின் உயிர்களை ஈவு இரக்கமின்றி காவு வாங்குவது தான் கழகத்தின் கொள்கையா? போலி சமூகநீதியின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தான் மலக்குழி மரணங்களில் தமிழகம் தனி இடம் வகிக்கிறது என்பது வெட்கக்கேடு. இப்படி நமது சமூகத்தின் அடித்தட்டு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடூர ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசின் அடிப்படைப் பதவியில் தொடரக் கூடத் தகுதியற்றவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.