“தோளோடு தோள் நிற்போம்”- அமித்ஷா
புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதிற்கான அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடினமான உழைப்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றை அளித்து வரும் காவல்துறையினருக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி காவல்துறையில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே இருந்தாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துள்ளீர்கள். வீரம் அர்ப்பணிப்பு காரணமாக குடியரசுத் தலைவர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதில் புதுச்சேரி காவல்துறை முதல் இடம் வகித்து வருகிறது. புதுச்சேரி அரசின் வளர்ச்சிக்கும், காவல்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடர்ந்து தோளோடு தோள் நின்று செயல்படும். 1963ல் டிஜிபி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து புதுச்சேரி காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1950 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியிலிருந்து குறைந்த அளவிலான நிதியே அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2026 வரையிலான 12 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ரூ.13,762 கோடியை வழங்கி புதுச்சேரியின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் தகவல்களை கேட்டபோது, புதுச்சேரி காவல்துறை மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தை பெற்றது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் சாகச நிறை மனதோடு பணி புரிந்திருக்கிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளாகவே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசம் மேம்பட வேண்டும் என்பதுதான். குறிப்பாக புதுச்சேரிக்கு பிரதமர் மோடி அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.