×

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை

 

புதுச்சேரி ‌பாஜக நிர்வாகியை, 5 நாட்களாக நோட்டமிட்டு வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் உமாசங்கர்(38). பாரதிய ஜனதா முன்னாள் இளைஞரணி நிர்வாகி. இவர் மீது நில அபகரிப்பு, ஆள்கடத்தல், கட்ட பஞ்சாயத்து என பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கருவடிகுப்பத்தில் தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழாவை கொண்டாட உமாசங்கர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான பணிகளில் ஈடுபட்டிந்தவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள‌ இரவு  நின்று கொண்டு இருந்தார். அப்போது 5 பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் உமாசங்கரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். 

இதுதொடர்பாக உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ உமாசங்கருக்கு பல்வேறு தரப்பிலும் எதிரிகள் உள்ளனர். இதனால் அவரை வெட்டி கொலை செய்த கும்பல் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உமாசங்கர் தன் வீட்டிலிருந்து வெளியேவந்த போது அந்த சாலையில் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு 5 பேர் நடமாடியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த அவர் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார், வழக்காக பதிவு செய்யப்படவில்லை. போலீஸ் குற்ற பதிவேட்டில் ஜிடி என்ட்ரியாக பதியப்பட்டுள்ளது. மேலும் உமாசங்கர் நடமாட்டத்தை அந்த கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளனர். சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று இரவு அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். உமாசங்கர் வெட்டிகொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே விடுதி, திருமண மண்டபம், பல்வேறு வியாபார நிறுவனங்கள் உள்ளது. இதனால் அங்குள்ள சிசடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகள் வந்த வாகனங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று லாஸ்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.