அரசு பதவியே இல்லாமல் தவெக அமைச்சரின் அப்பா ஆய்வு – வீடியோ வெளியிட்டு பாஜக எஸ்.ஜி.சூர்யா கடும் விமர்சனம்!
காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ அமைச்சர் டி.கே. பிரபுவின் அப்பா அரசுப்பணி குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மக்களோடு மக்களாக நின்று அமைச்சர் பிரபுவின் அப்பா பேசிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ பதிவை தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா, எந்தவொரு அரசுப் பதவியும் இல்லாமல், அமைச்சர் பிரபுவின் தந்தை 'ஆய்வு' என்ற பெயரில் அதிகாரிகளிடம் நேரடியாக அதிகாரம் செலுத்துகிறார்.
தன் கட்சியின் அமைச்சர்களையும் அவர்களின் குடும்ப ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்தத் துப்பில்லாத ஆளும் த.வெ.க மக்களுக்கு எப்படி சேவை செய்யும்? அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இது போன்ற அப்பட்டமான அத்துமீறல்கள்தான் இவர்களின் முக்கிய நோக்கமா? என்று பா.ஜ.க.வின் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பி இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து பாசிட்டீவ் மற்றும் நெகடீவ் கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.