×

தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை- அண்ணாமலை

 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில்  சௌராஷ்டிர தமிழ் சங்கமம் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரம் அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  மற்றும் தமிழக பா ஜ க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் தேர்தலை பணம் கொடுக்காமல் சந்திக்க முடியாது என்கிற நிலை தற்போது உள்ளது. வாக்குக்கு பணம் கொடுத்து, வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல  என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வித மாற்றுக்கருத்தும் அதில் இல்லை. ஆனால் அரசியல் மாற்றம் என்பது நாம் தேர்தலில் இருக்கக்கூடிய யுக்திகள், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்திக்கின்ற போது நம் சுத்தமான அரசியலை செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு இவர்கள் சுத்தமான அரசியல் தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க முடியும்.

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்காகவும், நேர்மையான அரசியல் காகவும் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் உறுதியாக சொல்கிறேன்.தமிழகத்தில் பணமில்லாமல் நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன் அது இல்லாவிட்டால் தமிழகத்தில் மாற்றம் என்பது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. இது குறித்து கட்சிக்குள் நான் பேசி வருகிறேன் வரும் காலத்தில் இன்னும் ஆக்ரோஷமாகவும் பேசுவேன். 

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும், நேர்மையான அரசியல் வர வேண்டும் அதற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அச்சரமாக இருக்க வேண்டும். மாநிலத் தலைவராக இருக்கும் நான் பொதுவாக சில கருத்துக்கள் சொல்ல வேண்டும். தலைவராக இருப்பதால் என்னால் என்ன செய்ய முடியும்? என்னால் என்ன செய்ய முடியாது என்ற மனப்பக்குவத்திற்கு நான் வந்து விட்டேன். நேரம் வரும்போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும், கட்சியினுடைய கருத்தையும் மக்கள் மன்றத்தில் வைப்பேன்” எனக் கூறினார்.