“வாக்குப்பதிவு சதவீதத்தை பார்த்தாலே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது தெரிகிறது”- எல்.முருகன்
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்கு பதிவு குறித்து அவிநாசி தொகுதி வேட்பாளரும் ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகன் அன்னூர் அவிநாசி பகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குசாவடி முகவர்களை சந்தித்தார். பின்னர் வாக்கு செலுத்தி விட்டு வந்த மக்களிடம் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “மக்கள் காலை முதலே வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை செலுத்து வருகின்றனர். அவிநாசி சட்டமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 12 மணி அளவில் 40 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது எதைக் காட்டுகிறது என்பது ஒரு அரசியல் மாற்றத்திற்குட்பட்டதாக உள்ளது. இன்று தமிழக மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நல்லபடியாக நிறைவேறும். ஒரு இருள் சூழ்ந்த ஆட்சியில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். பொதுமக்கள் இன்று காலை 7 மணியிலிருந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். அவிநாசி பகுதியிலும் கூட நன்றாக வாக்குப்பதிவு மிகவும் எழுச்சியுடன் செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வாக்களிப்பு சதவீதத்தை பார்த்தாலே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது தெரிய வருகிறது” என்றார்.