ஆண்டு வருமானம் ரூ. 12,96,000- எல்.முருகனின் சொத்து மதிப்பு வெளியானது
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள சொத்து மற்றும் வருமான விபரங்கள் வெளிவந்துள்ளன.
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவிநாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய ஆண்டு வருமானம் 12,96,000 ரூபாய் எனவும் தனது மனைவியின் ஆண்டு வருமானம் 36 லட்சத்து ஐந்தாயிரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு தனது வருமானம் 10 லட்சத்து 56 ஆயிரம் எனவும் அதேபோல் தனது மனைவியின் கடந்த ஆண்டு வருமானம் 27 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு 75 லட்சத்து 84 ஆயிரம் எனவும் மனைவியின் அசையும் சொத்து ஒரு கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் எனவும் அசையாத சொத்துக்கள் 69 லட்சத்து 50 ஆயிரம் எனவும் மனைவியிடம் ஒரு கோடியே 65 லட்சத்து 75 ஆயிரம் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 20 லட்சம் ரூபாய் தனக்கு வங்கி கடன் உள்ளதாகவும்,தனது மனைவி பெயரில் 18 லட்சத்து 62 ஆயிரம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கையிருப்பாக தன்னிடம் 60 ஆயிரம் ரூபாய் உள்ளதாகவும், தனது மனைவியிடம் எழுபதாயிரம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வேட்பு மனுவில் தன்னிடம் ஒரு கார் தனது மனைவிடம் ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.