கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு
பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி அளித்த புகாரை விசாரித்து வருகிறோம் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் கடந்த சில காலங்களில் போக்சோ (POCSO) வழக்குகள் 125% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட குஷ்பூ, திமுகவைச் சேர்ந்தவர்கள் பெண்களுக்கு எதிராகப் பல அக்கிரமங்களைச் செய்து வருவதாகச் சாடினார் . திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வரும்போது, அக்கட்சித் தலைமை அவர்களைத் தற்காலிகமாக நீக்கிவிட்டு, சில மாதங்களிலேயே மீண்டும் சேர்த்துக் கொள்வதாக அவர் விமர்சித்தார். ஒரு பெண்ணாக இருந்தும் கனிமொழி எம்.பி., பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்துச் சொந்த அண்ணனின் ஆட்சியிலேயே கேள்வி கேட்கத் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், "தமிழகத்தின் தந்தை" என்று தன்னை அழைத்துக் கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் கூறினார். இந்தியாவிலேயே மிக அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது என்று கூறிய அவர் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், மதுரையில் மாநகராட்சிப் பணிகளில் ரூ.200 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் முன்னேற்றத்திற்காக முத்தலாக் தடைச் சட்டம், 33% இடஒதுக்கீடு மற்றும் உஜ்வாலா யோஜனா போன்ற புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மதுரை மத்தியத் தொகுதியில் தனது கணவரும் இயக்குநருமான சுந்தர் சி. போட்டியிடப்போவதாக வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு வரலாற்று மற்றும் அரசியல் அறிவு மிக்கவர் என்றும், திமுகவினர் அவர் மீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்புவது அவர்களின் பயத்தையே காட்டுகிறது என்றும் பதிலளித்தார்.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டங்களில் ஒழுங்கற்ற முறையில் கூடும் கூட்டங்களை விஜய் தான் சரி செய்ய வேண்டும் என்றார். பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் அந்த புகாரை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.