"தேர்தல் நேரத்தில் மட்டும் தான் திமுகவிற்கு பெண்கள் நியாபகம் வரும்"- குஷ்பு
உங்கள் வீட்டு பெண்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா? என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மகளிர் அணி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணிகள் சார்பாக திமுக அரசை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் ,பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் , அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர், “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு பெண்களுக்காக என்ன உருப்படியான திட்டங்களைக் கொண்டு வந்தது? தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவிற்கு மக்கள் ஞாபகம் வருகிறது. 4 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் இங்குப் பாதுகாப்பில்லை. புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது தெளிவாகத் தெரியும். உங்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா? ஒட்டுமொத்த தமிழகப் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேச வேண்டும். பெண்களுக்கு எதிராக எங்கு கொடுமை நடந்தாலும் அதை ஒப்பிட்டுப் பார்க்காமல், ஒரு குற்றமாகப் பார்க்க வேண்டும்.
கரூர் உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்கள் கண்டிக்கக்கது. தமிழகத்தில் தற்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது. திமுகவினர் தங்கள் ராஜ்ஜியம் மட்டுமே நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ அவர்கள் மதிப்பளிப்பதில்லை. தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, அது குறித்த அறிவிப்பு வந்த பிறகு முறையான தகவல் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.