இந்துக் கோவில் நிலங்களை சூறையாட தொடங்கியுள்ள திமுக அரசு- ஹெச்.ராஜா
குடிசை முதல் கோவில் வரை அனைத்திலும் தனது ஊழல் கைவரிசையைக் காட்டுவது தான் திராவிட மாடல் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில் நிலங்களில், சுமார் ரூ.198 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசை சாடியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
குறிப்பாக, தேன்கனிக்கோட்டை நாகமங்கலம் ஹனுமந்தராய சுவாமி கோவில், கிருஷ்ணகிரி பாலேகுளியில் உள்ள பட்டாளம்மன் கோவில், மேலும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள பல கோவில் நிலங்களிருந்து சட்டவிரோதமாக கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதை , நமது சர்வாதிகாரி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். எதற்காக மக்கள் நமக்கு வாக்களித்தனர், நமது தார்மீக கடமை என்ன என்பதையெல்லாம் மறந்துவிட்டு, சின்னவரின் புகழைப் பாடுவதற்காகவே தான் பதவிப்பிரமாணம் எடுத்த நினைப்பில், எந்நேரமும் சின்னவர் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு.
அதுசரி, கோவிலை இடித்ததையும், கடவுளின் திருவுருவச் சிலைகளை கேவலமாக வர்ணிப்பதையும், இந்துக்களை மட்டம் தட்டி பேசுவதையும், இந்துமத சடங்குகளை கிண்டல் செய்வதையும் பெருமையாகப் பார்க்கும் திமுகவின் ஆட்சியில் கோவில் நிலங்களின் கனிமவள கொள்ளையைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? திராவிட மாடல் என்ற போர்வையில் இந்துமத வெறுப்பரசியலைப் பரப்பும் திமுக அரசு இந்துக் கோவில் நிலங்களையும் சூறையாட தொடங்கியதுதான் இந்த மூன்றாண்டுகால சாதனை !” எனக் குறிப்பிட்டுள்ளார்.