பாஜக அரசின் சூப்பர் திட்டம் : மாடு மேய்த்தால் மாதம் ரூ.10,000 சம்பளம்..!
Gaon Gwala Yojana திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
குவாலா நியமனம்: கிராமத்தில் உள்ள பசுக்களை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலை பாதுகாப்பாக மீண்டும் அழைத்து வருவதே இவர்களின் முக்கிய பணி.
ஊதியம்: ஒரு இடையருக்கு (குவாலா) மாதம் ரூ.10,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
நிபந்தனை: சுமார் 70 பசுக்களுக்கு ஒரு இடையர் என்ற அடிப்படையில் நியமனம் நடைபெறும். பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக கோட்டா மாவட்டத்தின் ராம்கஞ்ச் மண்டி பகுதியில் உள்ள கேட்லி (Khedli) கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மதன் திலாவர் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 14 கிராமங்களில் இடையர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே இதன் நிதி மேலாண்மைதான். இதற்கான ஊதியம் நேரடியாக அரசு கஜானாவிலிருந்து வழங்கப்படாது. மாறாக கிராமத்தில் உள்ள தன்னார்வலர்கள் (Bhamashahs), நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலமே இந்த நிதி திரட்டப்படும். இதன் மூலம் பசுப் பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பையும் அரசு உறுதி செய்கிறது.
இந்த திட்டம் குறித்து அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், "முன்பெல்லாம் கிராமங்களில் பொதுவான மாடு மேய்க்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் மறைந்து போன அந்தப் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கவே இந்த முயற்சி," என தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், "பசுவின் பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. எருமைப் பால் குடித்தால் குழந்தைகள் மந்தமாக வாய்ப்புள்ளது. எனவே பசுக்களைப் பாதுகாப்பது சமூகக் கடமை" என்றும் குறிப்பிட்டார்.