“தமிழகம் திமுகவை எதிர்த்து தான் போராடிக் கொண்டிருக்கிறது”- காரணங்களை அடுக்கும் பாஜக
தமிழகம் திமுகவை எதிர்த்து தான் போராடிக் கொண்டிருக்கிறது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள், ‘தமிழ்நாடு போராடும்’ என்ற வாசகம் தாங்கிய போஸ்டர்களை பல இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழகம் யாருடன் போராடும் ? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற சிந்தனையுடன் வாழ வேண்டும். நமக்குள் சண்டை சச்சரவுகள் இல்லை. நாம் ஒன்றாக இணைந்து வளர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும். என்று கூறினார். கரூர் கடும் துயரத்தில் அனைவரும் ஆள்காட்டி விரல்களும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தை நோக்கி நீட்டப்படும் நிலையில், அதை மடை மாற்றுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக இந்த விஷயத்தை நினைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய வழக்கமான அரசியல்தனத்தை இதில்காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், உண்மையில் தமிழகம் திமுகவை எதிர்த்து தான் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக தமிழகம் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முடிவு கட்ட போராடி வருகிறார்கள்.
நாமக்கல்லில் ஆயிரக்கணக்கானோரின் கிட்னி திருடப்பட்ட விவகாரத்தில், இப்பொழுது வரை வழக்கு பதியப்பட்டு அந்த குற்றச்செயலில் புரோக்கராக செயல்பட்ட திராவிட ஆனந்தன் என்கிற திமுக பிரமுகர் கைது செய்யப்படவில்லை. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக எம்.எல்.ஏ கதிரவன் அவர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி சீல் வைத்து மூடப்படவில்லை. உலகத்திலேயே எங்கும் நடக்காத அநியாயமாக ஒரு ஆளுங்கட்சியை சார்ந்தவர்களே, அரசு இயந்திரத்தின் துணையோடு அப்பாவி பொதுமக்கள் உடல் உறுப்புகளை திருடிய கொடூரம் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகத்திற்கு ஏற்பட்ட இந்த வரலாற்று தலைகுனிவை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக தமிழகம் திமுகவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. மரக்காணத்தில் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த ஒரே ஆண்டில், கள்ளக்குறிச்சியில் 66 பேர் அதேபோல கள்ளச்சாராயத்தை குடித்து மரணம் அடைந்தனர். அந்த வரலாற்று தலைகுனிவிற்கு பிறகும் கூட இன்றும் கள்ளக்குறிச்சி கச்சராபாளையம் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. சாராயம் கள்ளச்சாராயம் கஞ்சா போதை பொருள் என்று தமிழகமே போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், இதற்கெல்லாம் காரணமாக இருக்கக்கூடிய திமுகவிற்கு எதிராக தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவி காமக்கொடூரன் ஞானசேகரன் என்கிற திமுக காரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட “யார் அந்த சார்” என்கிற கேள்விக்கு இப்பொழுது வரை விடை கிடைக்காத நிலையில், அந்த விஷயமே தமிழக பெண்களின் தன்மானத்தையும் மனசாட்சியும் உலுக்கி வருகிற நிலையில், திருவண்ணாமலை ஏந்தல் பகுதியில் காவல்துறையில் பணியாற்றுகிற இரண்டு காவலர்களே காமுகர்களாக மாறி, ஒரு பெண்ணை தன்னுடைய சகோதரியின் முன்பாகவே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிற கொடுமை தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்றைக்கு முடிவுக்கு வரும் என்று தமிழக மக்கள் திமுக திராவிட மாடல் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மலைகள், ஆற்று மணல் படுகைகள் குவாரிகளால் சுரண்டப்பட்டு இயற்கை தாயின் தாய்மடி திமுகவால் சூரையாடப்பட்டு வருவதை எதிர்த்து தமிழகம் போராடி வருகிறது. இப்படி தமிழகமே திமுகவை எதிர்த்து போராடி வருகிற நிலையில், அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
நீட் தேர்வு தமிழகத்தில் வந்ததற்கு பிறகுதான் நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக முடிந்தது. இந்த உண்மையை மாநில அரசு அமைத்த ஏகே ராஜன் ஆணையமே அறுதியிட்டு கூறியுள்ளது. ஆனால் ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை பலிபீடம் என்கிறார். ஏன்? நீட் தேர்வு என்ற ஒன்று வந்ததால் தான், ‘தன்னிடம் பணம் இருக்கிறது’ என்கிற ஒரே காரணத்திற்காக ஒரு மாணவனால் டாக்டராக முடியாது என்கிற நிலை இங்கு ஏற்பட்டது. தயாநிதி மாறன் அவர்கள் தன்னுடைய மகளுக்கு டாக்டர் சீட்டு கிடைக்கவில்லை என்று புலம்பினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களின் பேரன் எல்லா மாணவர்களுடன் சரி சமமாக நின்று நீட் தேர்வு நடக்கின்ற தேர்வு மையத்தின் வாசலில் காத்திருக்கிறார்! இதுபோன்று பணம் கொழித்து இருக்கிற பெரும் பணக்காரர்களும் கூட தேர்வில் வெற்றி பெற்றால் தான் டாக்டராக முடியும் என்கிற நிலையை உருவாக்கிய காரணத்தால் நீட் தேர்வை ‘பலிபீடம்’ என்று சொல்லுகிறாரா ஸ்டாலின் அவர்கள்? தமிழகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடக்கும் பட்டப் பகல் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப்பொருள் புழக்கங்கள், உடல் உறுப்பு திருட்டுகள், இயற்கை வள சுரண்டல்கள் என கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழகம் திமுக ஆட்சிக்கு திமுகவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் தமிழகம் அந்த போராட்டத்தில் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.