☰
×

"திமுக போல தவெக செயல்படக்கூடாது"- அண்ணாமலை

 

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், "திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.  காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.