×

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... தினம் தினம் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தும் முதல்வர்- அண்ணாமலை

 

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தினம் தினம் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள் மீதான வன்முறை, பாலியல் தாக்குதல், ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் என, திமுக ஆட்சி தரங்கெட்டுப் போயிருக்கையில், எதற்காகப் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “இன்று மாலை, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர்கொலை, கொள்ளைகளைக் கண்டித்தும், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்களுடன் கலந்து கொண்டோம். சிவகிரியில், ஐயா ராமசாமிக் கவுண்டர் மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் தனியாக வசிப்பவர்கள் படுகொலை செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சிவகிரியில் கொலை செய்யப்பட்ட ஐயா ராமசாமி கவுண்டர் அவர்கள் படுகொலை வழக்கில், இன்னும் இரண்டு வாரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், வரும் மே 20 ஆம் தேதியிலிருந்து சிவகிரி மண்ணில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவிருக்கிறோம். இனியும் தமிழகத்தில் இது போன்ற படுகொலைகள் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கொங்கு பகுதியில் நடைபெறும் படுகொலைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றக் கோரி, திமுக அரசுக்குக் கடிதம் எழுதினோம். ஆனால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இனியும் ஒரு படுகொலை நடக்கக் கூடாது என்பதால், இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். பெகல்காமில் நடைபெற்றத் தீவிரவாதத் தாக்குதலில், 26 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், வாக்கு அரசியலுக்காக, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. கடந்த 2022, 2023, 2024 மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் 1,319, பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல் வழக்குகள் 4,949, போக்ஸோ வழக்குகள் 16,518 எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 

முதலமைச்சரின் கையில் சட்டம் ஒழுங்கு இல்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்குத் தைரியம் இல்லை. அதனால் காவல்துறைக்குத் தைரியம் இல்லை.  ஆனால், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தினம் தினம் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள் மீதான வன்முறை, பாலியல் தாக்குதல், ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் என, திமுக ஆட்சி தரங்கெட்டுப் போயிருக்கையில், எதற்காகப் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்? தமிழக அரசு நிர்வாகம் மொத்தமாகத் தோற்று போயிருக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், யாருக்குமே பாதுகாப்பில்லாத இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.