×

சோழர்கால செங்கோல் மூலம் கலாச்சாரத்தை மீட்டு எடுத்த பிரதமருக்கு நன்றி - அண்ணாமலை

 

தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும் எனவும், தமிழ்நாட்டை சேர்ந்த ஆதினங்கள் டெல்லியில் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைப்பர் என்றும் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.

தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக எடுத்துரைத்தார். ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும். தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.