அவசரமாக 3ஆவது மொழியை கட்டாயப்படுத்துவதா?- அண்ணாமலை
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான மும்மொழிக் கல்வி குறித்து மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மும்மொழி கல்வி அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஏப்ரலில் 6ஆம் வகுப்புக்கு 3 மொழிகள் கட்டாயம். அதில் 2 மொழிகள் இந்திய மொழிகள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது. சிபிஎஸ்இ அறிவித்தபோது குழந்தைகள் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் முடிவை வரவேற்ற பலரில் நானும் ஒருவன். ஏப்ரல் அறிவிப்பில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்புக்கு 3வது மொழி 3 ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மே 15ல் சிபிஎஸ்இ தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்று இந்த கல்வியாண்டிலிருந்தே புதிய விதிகளை அமலாக்குவதாக அறிவித்தது. சிபிஎஸ்இயின் அறிவிப்பு பல பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆறாம் வகுப்பில் விருப்ப மொழி பயின்ற நிலையில், திருத்தப்பட்ட அறிவிப்பில் 2 இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் 9ஆம் வகுப்பு மாணவர் புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும். 2029-30ஆம் கல்வி ஆண்டு முதலே 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.