×

“கொங்கு பகுதிகளில் விவாகரத்து அதிகம்! ஜென் ’சி’, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருக்கு சகிப்புதன்மை இல்லை”- அண்ணாமலை

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி ஸ்ரீ பூர்ண சேவானந்த மகராஜ் மணி மண்டம் திறப்பு விழா மற்றும் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வந்து சுவாமியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.


       
விழாவில் பேசிய அண்ணாமலை, “திருமணத்தின் போதே பிரியும் போது சொத்துக்களை எப்படி பிரிக்க வேண்டும் என ஒப்பந்தங்கள் போடுகின்றனர். இந்து மதத்தினர் மிக அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனர். அதுவும் கொங்கு பகுதிகளில் அதிக அளவு விவாகரத்து நடக்கிறது. தற்போதுள்ள ஜென்சி மற்றும் ஜென் ஆல்ஃபா போன்ற தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. இதை தடுக்க ஆன்மீகவாதிகள் துறவிகள் இளம் தலைமுறையினருக்கு போதிக்க வேண்டும். உலகில் அதிக அளவு மாடு மற்றும் பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்காக விவசாயம் மற்றும் நிலங்கள் பயன்படுத்துவதை விட மாடு மற்றும் பன்றிகளுக்கு உணவுக்காக விவசாயம் செய்து உணவளித்து வளர்த்து, பின் ஊட்டச் சத்துக்காக அந்த இறைச்சிகளை மனிதன் உட்கொள்ளும் நிலை உள்ளது. இது குறித்து சனாதன தர்மங்கள் நன்கு விளக்குகிறது. இந்து மதம் ஒரு வாழ்வியல் நெறியில் இருக்கக் கூடியது. நமக்கு பிற மதங்கள் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை. மத கோட்பாட்டுக்குள் அடங்காத வாழ்வியல் நெறிமுறையை பிற மதங்களுடன் ஒப்பிடுவது ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என ஒப்பிடுவது போல் ஆகும். எல்லா மதங்களுக்கும் தாய் மதமாக இந்து மத வாழ்வியல் நெறிமுறைகள் இருந்துள்ளது.

இன்னும் 20 ஆண்டுகளில் உலக அளவில் மதங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும். அதில் சனாதனத்தின் பங்கு என்ன என்பது குறித்தும் உலக அமைதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். 2055-ல் உலகில் அதிகமானோர் பின்பற்றக்கூடிய மதமாக இஸ்லாமியமும் இரண்டாவதாக கிறிஸ்தவமும் இருக்கும். அடுத்த இடத்தில் இந்து மதம் இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றது. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் அதற்காக சண்டையிடாமல் போட்டியில்லாமல் சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை இஸ்லாமியம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட பிறமதங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.