எங்கே சென்றது ரூ.309 கோடி நிதி? - அண்ணாமலை
4 ஆண்டு ஆட்சியில் சேமிப்பு கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க ரூ.309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. விவசாயிகள் இன்னும் சாலையில் நெல்லை உலரவைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது ரூ.309 கோடி நிதி? என பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தை சுட்டிக்காட்டி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் திரு. சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.