விஜயின் பரப்புரைக்கு அனுமதி தர வேண்டும்; காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - அண்ணாமலை
தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு வெளியில் வராமல் இருந்தால் பரவாயில்லை. தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது கூட இன்னமும் சிலர் களத்தில் காணோம் என தவெக தலைவர் விஜயை, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் முயற்சி என்பது ஒரே ஒரு கட்சியின் சாதனை அல்ல. அனைத்து கட்சிகளும் இணைந்து கொண்டுவந்த வரலாற்றுச்செயல். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி-க்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், நடிகர்களின் பின்னால் செல்லும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்குவது குறித்த ரஜினிகாந்த் அளித்த பதில் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ரஜினிகாந்த் எந்த சூழலில் பேசினார் என்பது தெளிவாக தெரியாமல் கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல. மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிய விஷயம் அல்ல. பலர் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தரமான வார்த்தைகளில் பேச வேண்டும். மக்களின் கவனத்தில் அனைத்து பேச்சுகளும் பதிவாகின்றன. வாக்குப்பதிவில் அது தாக்கம் ஏற்படுத்தும்.
விஜய் திமுக, பாஜ கூட்டணிக்கு இடையே போட்டி என கூறி அதிமுக பெயரை குறிப்பிடாமல் இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர். ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி கூறுகிறார்கள். வாக்காளர்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர்கள் தினமும் களத்தில் இருக்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், தினமும் தொகுதியில் பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு வெளியில் வரவில்லை என்றால் ஓ.கே. ஆனால், இப்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது கூட சில பேரை காணவில்லை. அறிக்கையிலும், டிவிட்டரிலும் தான் இன்னமும் இருக்கின்றனர். இந்த தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு இடையில் தான் போட்டி. மற்றவர்களும் இருக்கின்றனர். சீமான் கடுமையான பிரசாரம் செய்து கருத்துகளை முன்வைக்கிறார். கருத்துகளை கூட வைக்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர். தப்போ, சரியோ பொதுஇடத்திற்கு வாங்க, தப்போ, சரியோ வெயிலுக்கு வாங்க. தப்போ, சரியோ மக்கள் மன்றத்தில் வைங்க. தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. எல்லோரும் களத்திற்கு வர வேண்டும். அதனை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றே களத்தில் வரவில்லை என்றால், தேர்தலுக்கு பிறகு எப்படி தளத்திற்கு வருவாங்க என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும், தேர்தல் முறைகள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது ஜனநாயகத்துக்கு விரோதம். தேர்தல் ஆணையம் முழுமையாக நடுநிலையாக செயல்பட வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் சமமான அனுமதி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, நடிகர் விஜய் நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பாண்டிச்சேரியில், ராகுல்காந்தி திமுகவை பற்றியும் முதலமைச்சர் பெயரையும் கூட சொல்லவில்லை. இது அவர்கள் கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை காட்டுகிறது எனக் கூறினார்.