“ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கனும், இல்ல இந்த பக்கம் நிக்கனும், நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார்”- விஜய்யை விளாசிய அண்ணாமலை
புதுச்சேரியில் முருகப் பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் தீபப் போராட்டம் மற்றும் காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அரோகரா கோஷத்துடன் திருப்பரங்குன்றம் மாதிரி, தீப தூண் வைத்து மாதிரி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மகாத்மா காந்தியின் பெயர் இந்தியாவில் எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கும். திட்டம் மாறியுள்ளதால் விக்ஷித் நாடு என்ற பெயரை கொண்டு வந்துள்ளோம். இதனை காந்தியே ஒப்புக்கொள்வார். 2016-க்கு பிறகு காந்தியின் பெயரை நாங்கள் பல இடத்தில் வைத்துள்ளோம். அதற்கான பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதனை காங்கிரஸ் ஏன் பேசவில்லை. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்திருக்கிறார்கள். மீதியுள்ள 423 எம்.பிக்களும் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக இருக்கும் முருகபக்தர்கள், சிவ பக்தர்கள். அதனால் இந்தத் தீர்மானம் தோற்கும். மேலும், கையெழுத்திட்ட எம்.பிக்கள் அனைவரும் வரும் தேர்தலில் தோற்கப்போவது உறுதி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சனைகள், சண்டைகள் நடக்கிறது. நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள். தவறு எது, சரி எது என்பதை கூற வேண்டும். நடுவில் நின்றால் எப்படி. அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும். கம்முனு இருக்கும் இடத்தில் கம்முனு இருக்கனும், கும்முனு இருக்குற இடத்தில் கும்முனு இருக்குனும்னு தான் விஜய் இருக்கிறார். ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கனும், இல்ல இந்த பக்கம் நிக்கனும், ரோட்டுக்கு நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய விஜய் திருப்பரங்குனறம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் பற்றி ஏன் பேசவில்லை” என்றார்.