×

தலைமை மீது அதிருப்தியா? அமித்ஷாவிடம் போனில் பேசினேன்- அண்ணாமலை பேட்டி

 

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோட்டரி சங்கம் தியாகராய நகர் சார்பில் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு சிறந்த கலைஞர் விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம் நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த பாஜக மைய குழு கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை, அது மட்டுமல்லாமல் பாஜக தலைமை மீது நீங்கள் அதிருப்தியில் இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “என்னை பார்த்தால் அதிருப்தியில் இருக்கின்ற மாதிரி தெரிகிறதா? வேலை பளு, தொண்டர்கள் அழைக்கிறார்கள், நீங்கள் தலைவராக இருக்கும்பொழுது நேரம் கொடுக்கவில்லை. தற்பொழுது தொண்டராக இருக்கிறீர்கள் வாருங்கள் என்று கூறுகிறார்கள், அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கு நான் முறையாக தெரிவித்திருந்தேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசி மூலமாக நான் பேசியிருந்தேன். இது பெரிய பிரச்சனை கிடையாது, களத்திலும் தலைவர்கள் இருக்க வேண்டும். தலைவர்கள் களத்தில் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியம்.

எங்கள் கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பெருந்தன்மை மிக்க தலைவர்கள், அவர்கள் இந்த பாதையெல்லாம் தாண்டி தான் தலைவர்களாக இருக்கிறார்கள். 2026 விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதியவர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுக்ககூடிய ஒரு இடம் எப்பொழுதும் பத்து சதவீத வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். தாக்கத்தை ஏற்படுத்துவது வேறு, ஆட்சி அமைப்பது வேறு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது என்னுடைய தொடர் நம்பிக்கை” என்றார்.