×

“எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்” - அண்ணாமலை

 

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அமித்ஷா கூறவில்லை என அன்வர் ராஜா கூறியது பச்சைப் பொய் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினராகவும் ,  அமைப்புச் செயலாளராகவும் இருந்த அன்வர் ராஜா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.  அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, “கருத்தியல் ரீதியாக அதிமுக தடம் புரண்டுவிட்டது.  தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒரு இடத்தில் கூட அமித்ஷா சொல்லவில்லை. அதிமுகவை சீரழிக்க வேண்டும்  என்பதற்காகவே பாஜக கூட்டணி வைத்துள்ளது. 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா, முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி என ஏன் கூறவில்லை. எந்தக் கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை. கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான் தான் என ஈபிஎஸ்-ஆல் கூற முடியவில்லை” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான் என்பதை அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். இதில் எந்த குழப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அமித்ஷா கூறவில்லை என அன்வர் ராஜா கூறியது பச்சைப் பொய். தமிழக முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வந்து பணிகளை தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் கூறினார்.