×

"கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்திவிட்டார்”- அண்ணாமலை

 

கூட்டணி ஆட்சிதான், மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் பேசுங்கள் என அதிமுகவுக்கு அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக கூறிவருகிறார். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். அதையே பேட்டிகளில் அவர் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். அமித்ஷா சொல்லும் கூட்டணி ஆட்சி என்பதையே நான் திரும்ப சொல்கிறேன். அதிமுக மட்டும் ஆட்சி என்று அமித்ஷா சொல்லாதபோது நான் சொல்ல மாட்டேன். அதிமுகவுக்கு நெருடல் இருந்தால் அமித்ஷாவிடம் பேச வேண்டும். கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்திவிட்டார். இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம். என் கட்சி தலைவர் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ என பேசிய பின்பும், நான் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி இல்லை என நான் சொல்ல முடியாது.

அதிமுகவுடன் கூட்டணி அமைந்ததில் என் பங்கு எதுவும் இல்லை. மாற்றுக்கட்சியினர் என் மேல் கோபப்படுவதை விட நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.