×

#BREAKING கோவை வந்த பிரதமரை புறக்கணித்த அண்ணாமலை

 

கோவை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் லிஸ்டில் அண்ணாமலை  பெயர் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்தான் வரவில்லை என சொன்னார்,அது என்னவென்று கேட்கிறேன் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் , இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு  பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசியல் கட்சி களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கோவையில் முன்னாள் ஊழல் அமைச்சர் , இந்நாள் தியாகியை கோவை தெற்கு தொகுதிக்கு அறிவித்து இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுகவிற்கு உண்டு. இதுபோன்ற ஊழல் கறை பதிந்த அமைச்சரை கோவைக்கு அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக. கடந்த முறை போல பத்துக்கு பத்து தொகுதிகளை வெற்றி பெறுவோம். விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார், 
10 நாள் கழித்து பாருங்கள் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று...  அவர்களின் தேர்தல் அரசியல் என்பது வேறு. அவர்களுக்கு இது முதல் தேர்தல்,  முதல் விஷயம் என்பதால் ஒரு ஆர்வம் இருக்கலாம். அவர்கள் தலைவருக்கும் இருக்கலாம். விஜயினுடைய பேச்சை சீரியஸாக எடுத்துக் கொண்டால்,  திமுகவிற்கு மாற்றுத் தவெக என்பது இல்லை. முதல்வர் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கும் இடையே போட்டி என சொல்கின்றார். நாங்கள் திமுகவில் ஒரு குடும்பத்திற்கும் வளர்ச்சிக்குமான தேர்தல் என சொல்கிறோம். தவெக அரசியல் வேலைகளை கொஞ்சம் ஆர்வமாக நாங்கள் பார்க்கிறோம். பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி , பியூஸ் கோயல் நாளை வெளிநாட்டில் இருந்து வருகிறார். அவர் வந்தவுடன் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்து.  அதன் பின்னர் அது டெல்லி சென்று அதன் பின்பு வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். கூட்டணிக்கு எந்தத் தொகுதி வருகிறது ,போகின்றது என எனக்கு தெரியாது. பா.ஜ.கவில் தனித்தனி ஆதரவாளர் என்று இல்லை, அண்ணாமலையின் அன்பு கூட்டத்தில் நாங்களும் இருக்கிறோம், அவர் எங்கள் அன்புக்குரிய தம்பி. வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் அவருக்கு கொடுக்கவில்லை , இவருக்கு கொடுக்கவில்லை என சொல்ல முடியாது. யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும், ஒருவர் சாதாரணமாக வந்து ஒரு ஐந்து ஆண்டு வேலை பார்த்தவர்களுக்கு ஒரு ஆசை இருக்கும், ஆனால் யாருக்கு கொடுக்க வேண்டும் அவர்களால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பார்த்து கட்சி கொடுக்கும் ” என தெரிவித்தார்.

பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்தும் பிரதமரை வரவேற்க வரவில்லையே என்ற கேள்விக்கு? பதிலளித்த வானதி சீனிவாசன், நான் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன். லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது, அவர்தான் வரவில்லை என சொன்னார்கள் எனக்கூறிய அவர், அது என்னவென்று கேட்கிறேன் என தெரிவித்தார்.