ஒரு எம்பி தொகுதியில் 49 லட்சம் வாக்காளர்களை எவ்வாறு கையாள முடியும்? - அமித்ஷா
அதிக மக்கள் தொகையை கருத்தில் கொண்டே தொகுதி மறுவரையறை மூலம் அவையை விரிவுபடுத்த நினைத்தோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மக்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அதிக மக்கள் தொகையை கருத்தில் கொண்டே தொகுதி மறுவரையறை மூலம் அவையை விரிவுபடுத்த நினைத்தோம். 49 லட்சம் வாக்காளர்கள் இருக்கக்கூடிய ஒரு தொகுதியில் ஒரே ஒரு எம் பி இருந்து எப்படி வேலை செய்ய முடியும். இன்னொரு பக்கம் வெறும் 60 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கக்கூடிய தொகுதிக்கு ஒரு எம்பி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய வித்தியாசம் இவை எல்லாம் சரி செய்ய வேண்டாமா? திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நாட்டை பிளவுபடுத்த பார்க்கின்றனர். வடக்கு - தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து தொகுதி மறு வரையறை மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க கூடாது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தியா கூட்டணி, இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கின்றனர். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் வரவேற்கிறேன். வளர்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுவது வருத்தமாக இருக்கிறது. வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரித்து பேசுவது அதிகரித்திருந்ததை பார்த்து நான் கவலை அடைந்தேன். எங்களைப் பொறுத்தவரை எந்த பிரிவினையும் கிடையாது. வடக்கிற்கு என்ன சலுகைகள் இருக்கிறதோ, என்ன அதிகாரம் இருக்கிறதோ அதுதான் தெற்கிருக்கும் கிடைக்கும். லட்ச தீப போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் கூட அதிகாரத்தில் எந்த குறைவும் இருக்காது. 2029 ஆம் ஆண்டு பொது தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். எதிர்க்கட்சிகள் தொகுதி மறு வரையறையை எதிர்க்கவில்லை பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தான் எதிர்க்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் பெண்களுக்கு எதிரான மனநிலை வெளிப்பட்டு விட்டது” என்றார்.