×

”நாலாண்டுகால 420” நிர்மல் குமாரை அதிமுகவில் இணைத்ததற்கு ஈபிஎஸ்க்கு பாஜக கண்டனம்

 

பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் தலைவராக இருந்த நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். 


அண்மையில் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் தற்போது கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து தற்போது விலகுவதாக அறிவித்து உள்ளார். பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த அனைவரும் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்றுள்ளனர்.அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் விலகுவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்ததற்கு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ள அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய  இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? 
இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இப்படி செய்திருக்க கூடாது. 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது, கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய 
எடப்பாடிக்கு வாக்காளர்கள் பாடத்தை புகட்டியுள்ளானர். 

நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.