வாட்ஸ்ஆப் மூலம் பிறப்பு சான்றிதழ்- சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு
சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் பிறப்பு சான்றிதழை எளிமையாக பெறும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் டிஜிட்டல் வழியான பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக தற்போது மக்களுக்கு இந்த சேவையினை எளிதில் வழங்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பின் போது பதிவு செய்யப்படும் பெற்றோர்களது கைபேசி எண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் PDF வடிவில் அனுப்பி வைக்கப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் சாட்பாட் எண் 94450 61913 என்ற எண்ணிலும் பெற்றோர் தங்களது குழந்தை பிறப்பின்போது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மூலம் குழந்தையின் தகவல்களை பதிவு செய்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளர்.