#BIG NEWS : மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண் அமைச்சரானார்..!!
மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் களம் இறங்கி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியாளரை 12,535 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இவர் போட்டியிட்ட ஆஸ்கிராம் சட்டசபை தொகுதி மக்கள் மத்தியில் கலிதா மாஜிக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு.
2006ல் பிளம்பர் வேலை செய்து வந்த ஒரு பிளம்பரை கலிதா மாஜி திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக குஸ்காரா பகுதியில் வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்து, சுத்தம் செய்தல், சமையல் மற்றும் பராமரிப்புப் பணிகளை செய்து வந்தார். அவர் மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார்.
பிரதமர் மோடியே தனது அரசியல் பயணத்துக்கு உத்வேகமாக இருந்ததாக கலிதா மாஜி தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சராகப் பதவியேற்ற மகிழ்ச்சியில் பாஜ எம்எல்ஏ கலிதா மாஜி கூறியதாவது: வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்தபோதிலும், எனது பணிகளை செய்து கொண்டே அனைத்து பாஜ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன்.
நான் எனது தொகுதி மக்களை பற்றி மட்டுமே சிந்தித்து வந்தேன். பின்தங்கிய மக்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது, சுகாதார மையமும் இல்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக எனது முதல் பணி, ஒரு மருத்துவமனையாகக் கட்டுவது தான்.பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். எனது தொகுதியில் வசிக்கும் மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கு காடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு வீட்டுப் பணியாளரும் அரசியல்வாதியாக ஆக முடியும் என்று கூறினேன். தற்போது அது நிறைவேறி உள்ளது. பாஜவால் பெண்களையும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரையும் மேம்படுத்த முடியும். என்னைப்போன்ற ஏழை மக்களுக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன். ஊழலற்ற ஆட்சி மற்றும் ஏழைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன், என்றார்.