☰
×

#BIG NEWS : 6 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செல்லுமா? தீர்ப்பு தள்ளிவைப்பு..!

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்தியபாமா, அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார், கரூரில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாக இந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அளித்த தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இதனிடையே, இந்த 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்களின் ராஜிநாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அதன்படி, இதற்கு முந்தைய விசாரணையின் போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிநாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா? என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்ததமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேரின் ராஜிநாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில், அமைச்சரை சந்தித்து அவர்கள் தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால், இதுசம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜிமாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ராஜிமாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி விடுப்பு காரணமாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு வரும் 12-ம் தேதிக்கு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தரப்பில், ராஜிமாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிட்டது. ராஜிமாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜிமாமா செய்ய விரும்பினால், அவர்களை பதவியில் நீடிக்கும்படி யாரும் நிர்பந்திக்க முடியாது.

உறுப்பினர்களின் ராஜிநாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை மீறியதாகிவிடும். சுய விருப்பப்படி ராஜிநாமா செய்தாரா?என்பதை மட்டும் தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்திற்காக ராஜிநாமா செய்தார்களா? குதிரைபேரம் நடந்ததா? என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜிநாமாவின் நோக்கம் என்ன? என்பதை, ராஜிநாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, ராஜிநாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அதன் சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கையின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல்தான்.

சட்டமன்ற உறுப்பினரின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாகிவிடாது. சபாநாயகரை சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜிநாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில், 2 விஜயபாஸ்கர்களின் ராஜினாமாக்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 16-ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2 விஜயபாஸ்கர்களுக்கும், சட்டசபைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, ஜூன் 17-ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

 தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்க உள்ளது.