×

#BIG NEWS : தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட வாய்ப்பு..!!

 

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 'சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, ஹிந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.

அவருக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், முதல்-வர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால்,'செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'ராகுல் பேச்சை தவறுதலாக, செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால், அவர் பிரசாரத்திற்கே வரக்கூடாது என, ராகுல் கூறியுள்ளார். அதை மறைக்க, செல்வப்பெருந்தகை நாடகம் ஆடுகிறார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இந்நிலையில், செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும், வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு நேற்று முன்தினம் வந்த கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி ஆகியோரிடம், வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தில், யார் சொல்வது உண்மை என விசாரித்துள்ளார். அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளை, ராகுலிடம் வேணுகோபால் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை செயலால், ராகுல் 'அப்செட்' ஆகி உள்ளார். எனவே, சட்டசபை தேர்தலுக்கு பின், தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகை மாற்றப்படுவார் என, எதிர் கோஷ்டியினர் தெரிவித்து வருகின்றனர்.