×

#BIG NEWS : விஜய்யின் கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து..!

 

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என இரண்டு இடங்களில் நடிகர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.எடப்பாடி தொகுதியை தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
 

பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரசாரத்திற்கு காவல் துறையினர் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர். இதனால், அந்தப் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உட்பட 3 தொகுதிகளில் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு விஜய் வருவதற்கே மிகவும் தாமதம் ஏற்பட்டது. விஜய் வரும் வழியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு விஜய் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியதால் அங்கு பேசாமலேயே ரோடு ஷோ மட்டும் விஜய் புறப்பட்டுச் சென்றார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடலூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவிருந்த நிலையில் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்யவிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.வரும் 19 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் நாளை பரப்புரைக்கு பதில் விஜய் ரோடு ஷோ செல்லவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்காகத் காவல்துறையிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரும், அடுத்தடுத்து தனது பயணங்களை ரத்து செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று கடலூரில் நடைபெறவிருந்த பரப்புரையை ரத்து செய்த நிலையில், வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அவர் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான காரணங்களைத் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் மௌனம் காத்து வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஏப்ரல் 13-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதே நாளில் அதே பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனுமதி கிடைத்தும் கடைசி நேரத்தில் விஜய் பின்வாங்குவது ஏன் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது அக்கட்சியின் தேர்தல் வியூகமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.