☰
×

#BIG NEWS : 5-ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி இரு வெளிநாட்டவர் பலி..!!

 

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கியதில் இரு வெளிநாட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு நகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான 'கான்ராட்' (Conrad) விடுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் ஜெர்மனி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இருவரும் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரையும் காப்பாற்ற முயன்றபோது மேலும் இருவர் காயமடைந்தனர். ஹோட்டலில் தங்கியிருந்த அமெரிக்காவை சேர்ந்த விருந்தினர் ஒருவரும், இந்தியாவைச் சேர்ந்த நீச்சல் குளப் பராமரிப்பாளரும் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது காயம் அடைந்தனர்.

உயிரிழந்த ஜெர்மன் நாட்டு சேர்ந்தவர், லுஃப்தான்சா (Lufthansa) விமான நிறுவனத்தின் ஊழியரான அலெக்ஸாண்டர் மெக்சிமிலியன் தீஸ் (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேபோல், உயிரிழந்த ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் பிரபல ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் திட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த யுராஜ் ஹோர்வத் (45) ஆவார்.

வெள்ளிக்கிழமை மாலை ஹோட்டலின் 3-வது தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இவர்கள் இருவரும் நீந்த சென்றபோதே இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவர்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டெசாண்டிஸ் (41) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நீச்சல் குளப் பராமரிப்பாளர் ராகுல் திவாரி (28) ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்த விபத்து தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தின் தரப்பில் இதுவரை எந்த கருத்துமே தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, சனிக்கிழமை காலை ஹோட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை நீச்சல் குளம் "பராமரிப்பு பணிகளுக்காக மூடி வைக்கப்பட்டுள்ளது" என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹில்டன் (Hilton) குழுமத்தை சேர்ந்த கான்ராட் ஹோட்டல், 24 தளங்களை கொண்ட சொகுசு ஐந்து நட்சத்திர விடுதியாகும். சாதாரண அறைக் கட்டணமே ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் ₹25,000 வசூலிக்கப்படும் நிலையில், இந்த விபத்து ஹோட்டல் நிர்வாகத்தின் தீவிர அலட்சிய போக்கை கேள்விகுள்ளாக்கியுள்ளது.