#BIG NEWS : அதிமுகவுக்கு அடுத்த அடி! மாஜி அமைச்சர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ராஜினாமா..!
தமிழக அரசியல் களத்தை உலுக்கி வரும் எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவல் படலத்தில், அடுத்த அதிரடியாக நெல்லை மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத தூணான அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் வெடித்துள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) மற்றும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.நேற்றைய தினம் 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், இன்று 4-வது நபராக இசக்கி சுப்பையாவும் வெளியேறுவது அதிமுக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், தென் மாவட்டங்களின் முக்கிய முகமுமான இசக்கி சுப்பையா, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை நேரில் சந்தித்து தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2011 அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் இசக்கி சுப்பையா. மேலும், 2016-ல் கட்சி உடைந்தபோது டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சி அலுவலக கட்டிடத்தையே வழங்கிய அளவுக்குப் பின்னாளில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தார். பின்னர் மீண்டும் தாய் கழக்கமான அதிமுகவில் இணைந்து, 2021 மற்றும் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று தென் மாவட்டங்களில் கட்சியின் முகமாக விளங்கி வந்தார்.
சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்த சூழலில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் இக்கட்டான கட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்புக்கு ஆதரவாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசுக்கு ஆதரவாகவும் இசக்கி சுப்பையா வாக்களித்திருந்தார். புதிதாக அமையவுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று எஸ்பி. வேலுமணி தரப்பு தீவிரமாக நம்பியிருந்தது. ஆனால், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு இடம் இல்லை என்பது உறுதியானதை அடுத்து, வேலுமணி முகாமில் இருந்த 25 எம்.எல்.ஏ-க்களிடையே கடும் அதிருப்தி வெடித்தது.
இந்த அதிருப்தி அலையின் உச்சக்கட்டமாக, நேற்று 5 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் இபிஎஸ் பக்கமே திரும்பிய நிலையில், 3 முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து, இன்று இசக்கி சுப்பையாவும் வெளியேறுவதால் வேலுமணி முகாமின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது. தவெக-வில் இணையும் 4-வது விக்கெட்டாக இசக்கி சுப்பையா இன்று மதியத்திற்கு மேல் பனையூர் தலைமை அலுவலகத்தில் முறைப்படி தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அசுர பலம் கொண்ட இசக்கி சுப்பையாவின் இந்த திடீர் விலகல் முடிவால், தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 44-லிருந்து 43 ஆகக் குறைந்துள்ளது. கோட்டையில் தவெக அரசு தனது பலத்தை அதிகரித்து வரும் அதே வேளையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இந்த நகர்வு அடுத்தடுத்த பலத்த அதிர்ச்சிகளை அளித்து வருகிறது. மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து தவெக-வை நோக்கி நகரக்கூடும் என்ற தகவல்களால் தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் சூடுபிடித்துள்ளது.