#BIG NEWS : மும்பையில் பதற்றம்..! மகாத்மா காந்தி கொள்ளுப்பேரன் கைது..!
மும்பை போலீஸார் தன்னை கைது செய்திருப்பதாக மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு..கரப்பான் ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற வழியில் கைது செய்யப்பட்டதாக அறிவிப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் 'சலே ஜாவோ' (வெளியேறு!) போராட்டத்தை நடத்தத் திட்டமிட்ட மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் 'ஹம் பாரத் கே லோக்' அமைப்பின் தலைவருமான துஷார் காந்தியை மும்பை போலீசார் சனிக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்புக் காவலில் எடுத்துள்ளனர்.
சாண்டா குரூஸ் காவல் எல்லைக்குட்பட்ட நேஷனல் காலேஜ் சந்திப்பில் வைத்து பாந்த்ரா பகுதியில் துஷார் காந்தி மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் பிடித்துச் சென்று டி.என். நகர் காவல் நிலையத்தில் வைத்தனர்.
இது குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள துஷார் காந்தி, "நேஷனல் காலேஜ் சந்திப்பில் வைத்து சாண்டா குரூஸ் போலீஸாரால் பிடித்துச் செல்லப்பட்டேன். கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறேன். மும்பை போலீஸ் ஜிந்தாபாத். தற்போது டி.என். நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளேன். ஜனநாயகம் வாழ்க! நான் கைது செய்யப்பட்ட போதிலும் ஆகஸ்ட் கிராந்தி மைதானப் போராட்டம் தொடரும். அனைவரும் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திற்கு வாருங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், துஷார் காந்தியை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யவில்லை என்றும், முன்னெச்சரிக்கையாகத் தடுப்புக் காவலில் மட்டுமே வைத்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஹம் பாரத் கே லோக்' அமைப்பின் துணைத் தலைவர் குடி எஸ்.எல். அந்தேரியில் வைத்துப் பிடிக்கப்பட்டு எம்.ஐ.டி.சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Arrested at Ntional College wjile on my way to August Kranti Maidanby Mumbai police.
— Tushar Gandhi (@TusharG) October 10, 2026
போராட்டத்தின் பின்னணி என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி (CJP) போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு அமைதிப் போராட்டம் நடத்த துஷார் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.
டெல்லி போராட்டத்திற்குச் செல்ல முயன்றவர்களைத் தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மும்பை காவல் துறை, வெள்ளிக்கிழமை மட்டுமே 200-க்கும் மேற்பட்டோரைத் தடுப்புக் காவலில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.