#BIG NEWS : மும்பை விமான நிலையத்தில் அதிர்ச்சி! - இண்டிகோ-ஏர் இந்தியா விமானங்கள் மோதல்; இறக்கை சேதம்..!
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஓடுதளத்தில் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து கோவைக்குப் புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானம் (AI 2732) ஓடுதளத்தில் தயாராக நின்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்தடைந்த இண்டிகோ விமானம் (6E 791) தரையிறங்கி டாக்ஸிவேயில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கையின் மீது மோதியது. இந்த விபத்தில் கோவை செல்ல வேண்டிய விமானத்தின் இறக்கை லேசாகச் சேதமடைந்தது.
இந்த மோதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இரண்டு விமானங்களும் உடனடியாகத் தனி இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதனால் கோவை செல்ல வேண்டிய பயணிகள் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானிகளின் கவனக்குறைவா அல்லது சிக்னல் குறைபாடா என்பது குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.