×

#BIG NEWS : துபாய் ஆட்சியாளரின் சகோதரர் ஷேக் அகமது காலமானார்..!

 

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் சகோதரர் ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது 76-வது வயதில் காலமானார். அவரது மறைவையொட்டி துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது. இந்த துக்கக் காலத்தில் அரசு மற்றும் முக்கிய இடங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது தம்பியின் மறைவு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ‛எனது அருமை சகோதரர் ஷேக் அகமது பின் ரஷீத்தின் ஆன்மாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும். அவர் நம்மிடம் இருந்து பிரிந்தாலும், எங்கள் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்' என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறப்புக்கு, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

​யார் இந்த ஷேக் அகமது?

​1950-ல் பிறந்த ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் மறைந்த முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் இளைய மகன் ஆவார். ​புகழ்பெற்ற இங்கிலாந்தின் சாண்ட்ஹர்ஸ்ட் ராயல் ராணுவக் கல்லூரியில் பயின்றவர்.​துபாய் ராணுவ தலைமைத் தளபதியாகவும், துபாய் காவல் மற்றும் பாதுகாப்புத் துறையில் பல்வேறு முக்கிய உயர் பொறுப்புகளையும் வகித்தவர். ​பாதுகாப்புத் துறை மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டுத் துறையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ​அவரது மறைவு யுஏஇ மக்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.