#BIG NEWS : கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
Mar 7, 2026, 16:32 IST
2025-ம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் பெண்ணின் நண்பரைத் தாக்கி விட்டு மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதேபோல் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (வயது 21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (வயது 20) ஆகியோரை காவல்துறையினர் துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். குற்றச் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்கள், மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கில் 112 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சாட்சியம் அளித்தனர். 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பி.ஜிஷா, எதிர் தரப்பு வக்கீல் சசிகுமார் தங்கள் வாதங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கில் இன்று (மார்ச் 07) மதியம் 02.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுந்தர்ராஜன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூன்று பேரும் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தீர்ப்பு தொடர்பான விவரங்களை வாசித்த நீதிபதி,வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேருக்குமான சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை அதாவது சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், அவரது நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.