#BIG NEWS : Paytm Payments வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி!
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949-ன் கீழ் விதிகளை பின்பற்றவில்லை என்பதாலும், வைப்புத்தொகை வைத்திருப்பவர்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டது போன்ற காரணங்களால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இனி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியால் எந்தவிதமான வங்கிச் செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது. இந்த வங்கியில் போதிய அளவு நிதி (Liquidity) கையிருப்பு இருப்பதால், வாடிக்கையாளர்களின் அனைத்து வைப்புத் தொகைகளும் திருப்பிச் செலுத்தப்படுவதில் எந்த வித பிரச்சினையும் இருக்காது" என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை கலைப்பதற்கான விண்ணப்பத்தை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் புதிய டெபாசிட்டுகள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகளை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியால் இனிமேல் மேற்கொள்ள முடியாது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு எந்தத் தடையும் இருக்காது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கடந்த 2017 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அனுமதியை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி பெற்றது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இது ஒரு பொதுத் துறை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. மே 23, 2017 அன்று வங்கி செயல்பாடுகளை தொடங்கினாலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியால் 2017-ம் ஆண்டு நவம்பர் 28 அன்று பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ச்சியான விதிமீறல் புகார்கள் காரணமாக இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.